கோவை: கோவையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான சில மாற்றங்களை செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. துடியலூரில் புதிய கிராசிங் ஸ்டேஷன், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள், போத்தனூரில் ரயில் பராமரிப்பு வசதிகள் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் வந்தே பாரத் ரயிலிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? இது குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தெற்கு ரயில்வே பொது மேலாளர் உ. சுப்பா ராவ், கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பல்வேறு வசதிகள், திட்டங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
“கோவை – மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் உள்ள துடியலூர் ரயில் நிலையத்தில் புதிய கிராசிங் ஸ்டேஷன் அமைக்கத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் ஆர்வலர்களும் பயணிகள் நலச் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகில் உள்ள துடியலூரில் போதுமான நிலம் இருப்பதால் அங்கு கிராசிங் ஸ்டேஷன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்களைப் பராமரிப்பதற்காகக் கூடுதலாக 3 பிட் லைன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு நடைபெற்று வரும் மற்ற மேம்பாட்டுப் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.
கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெரிசலைக் குறைப்பதற்காக, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் ஐலேண்ட் பிளாட்பாரம் உட்பட 3 கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்குக் கையாளும் முனையத்தையும் கோவை வடக்கு ரயில் நிலையத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீட்டர் கேஜ் காலத்தில் கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். அதே நேரத்தில், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தைப் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்டத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை.
கோவை வடக்கு – மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றெல்லாம் தெரிவித்தார்.
இதனிடையே, கொங்கு குளோபல் ஃபோரத்தின் துணைத் தலைவர் வனிதா மோகன் தலைமையிலான குழுவினர், கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரை சந்தித்தனர். கோவையில் ரயில்வே கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள், புறநகர் ரயில் இணைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை NXT அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜே. சதீஷ், “கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.. கோவை – திருவனந்தபுரம் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை இயக்கும் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. தற்போது கோவை சந்திப்பு ரயில் நிலையத்தைத் தவிர்த்துச் செல்லும் ரயில்களை அந்த நிலையம் வழியாக இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.
இதில், துடியலூரில் புதிய கிராசிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டால், கோவை – மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் எதிரெதிர் திசைகளில் செல்லும் ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல வசதி கிடைக்கும். இதனால் ரயில்கள் காத்திருக்கும் நேரம் குறைந்து, ரயில் போக்குவரத்தைச் சீராக இயக்க உதவலாம்.
அதேபோலா, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் 3 கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டால், அதிக ரயில்களை கையாளும் வசதி கிடைக்கும். கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்குக் கையாளும் முனையத்தை கோவை வடக்குக்கு மாற்றினால், சந்திப்பில் பயணிகள் ரயில்களுக்கான இடவசதி மேம்பட வாய்ப்புள்ளது.
போத்தனூரில் 3 புதிய பிட் லைன்கள் அமைக்கப்படுவதால், ரயில்களைப் பராமரிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கும். கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால், அதிக பயணிகள் பயணம் செய்ய முடியும்; நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது…!!!
