தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனைப் போலீசார் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யின் முதுகெலும்பை உடைப்போம் என்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனைத் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பலத்த பாதுகாப்புடன் மார்க்கண்டேயன் அழைத்துசெல்லப்பட்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய மார்க்கண்டேயன், அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் தொண்டர்களைப் பார்த்து, “போலீசார் என்னை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார்கள். என்னை அடிக்கப் பார்க்கிறார்கள் என ஆவேசமாகக் கூச்சலிட்டார். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. உடனே காவல்துறையினர் அவரைச் சூழ்ந்துகொண்டு மருத்துவ அறைக்குள் விரைவாக அழைத்துச் சென்றனர்.
மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின், தூத்துக்குடி மாவட்ட ஜே.எம் 1 (JM 1) நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி அவர்கள் முன்பாக மார்க்கண்டேயன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும், த.வெ.க அரசிற்கு எதிராகத் தீவிர கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
