துரோகிகள் படை நம்மை சூழ்ந்துள்ளன: இபிஎஸ் பேச்சு

சென்னை:அதிமுகவை துரோகிகள் படை சூழ்ந்துள்ளன என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசி உள்ளார்.

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில், நடந்தது. இது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், ‘பாஜவுக்கு, அதிக தொகுதிகளை ஒதுக்கியது தவறு. ராமநாதபுரம் தொகுதியில், அதிமுக நின்றிருந்தால் வெற்றி பெற்று இருப்போம். நம் கட்சிக்குள்ளேயே, திமுக ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர்களால் தான் நாம் தொடர்ச்சியாக தோல்வி அடைகிறோம் என கட்சியினர் கூறினர்.

இதற்கு பதிலளித்த இபிஎஸ், தோல்வியில் இருந்து மீள்வது அதிமுகவுக்கு கைவந்த கலை. ஆனால், கட்சிக்குள் துரோகிகள் படை, நம்மை சூழ்ந்து இருக்கிறது. அவர்களை, அடையாளம் கண்டு ‘களை’ எடுத்தால் தான், அதிமுக வெற்றி அடையும்.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துங்கள். கூட்டணி இல்லாமல், திமுக பலவீனமாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால், நிச்சயம் நாம் வெற்றி அடைவோம் என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link