”துர்கா பூஜையில் கோட்சே படம்”; கொந்தளிக்கும் பொது மக்கள்

மேற்குவங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ’துர்கா பூஜை’ வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் 17 அன்று நடைபெற்ற இந்த விழா குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, துர்கா பூஜையை முன்னிட்டு, பூர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள மகிஷாதல் பகுதியில், பந்தல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், வழக்கம் போல் பகத் சிங், காந்தி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களும், விவேகானந்தர் உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த படங்களுக்கு இடையில் காந்தியைக் கொன்ற கோட்சேவின் படமும் இடம் பெற்றது மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பொதுவாக, துர்கா பூஜையானது மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த பூஜையின் போது, பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமகால கருப்பொருள்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம். 

அந்த வகையில், மஹிஷாதல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இணைய வாசிகள் பலரும் பயங்கரவாதி கோட்சேவின் படம் திருவிழாவில் பெற்றதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், மக்களுக்கு எதிரான, சமூக அமைதிக்கு எதிரான பயங்கரவாதிகளை மக்களிடையே கொண்டு சேர்க்க சிலர் திட்டமிட்டே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த பந்தலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் இது குறித்துப் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.