துாத்துக்குடி துப்பாக்கிசூடு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய கலெக்டர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடியில் 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிசூடு நடந்தது. 13 பேர் பலியாகினர். இதில் சி.பி.ஐ., விசாரணை, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் கோரி 2018 ல் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கலாகின. 2018 ஆக.,14 ல் சி.பி.ஐ., விசாரணைக்கு அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்: சம்பவத்திற்கு பின் 3 பேர் இறந்தனர். துப்பாக்கிசூடு குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் அமைத்தது. அது விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. துப்பாக்கிசூடு தொடர்பாக ஒரே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மட்டும் மதுரை (சி.ஜெ.எம்.) நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. இதற்கு எதிராக அந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது.

சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர்: 101 தனி நபர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் மீது கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி டில்லியில் உள்ளார். கூடுதல் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை.

இவ்வாறு வாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா. அப்போதைய கலெக்டர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கமிஷன் பரிந்துரைத்தது. அதன் மீது அரசின் நிலைப்பாடு என்ன. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு ஏற்கனவே ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதி ரூ.20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் ஆக.,13ல் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Source link