தூத்துக்குடி காவல் மரணம்: தவெக அரசை கடுமையாக சாடும் டிடிவி தினகரன்! – thoothukudi custodial death ttv dhinakaran slams tvk govt demands special probe commission

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, தொடர் காவல் மரணங்கள் நிகழ்ந்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அருணாச்சலம் மரணமடைந்த சம்பவத்தை முன்னிறுத்தி, தவெக அரசுக்கு அவர் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி லாக்அப் மரணம்: உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

தூத்துக்குடி அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையா அல்லது காட்டுமிராண்டித்துறையா? – மரண வாக்குமூலம் வீடியோவால் அதிர்ச்சி

உயிரிழந்த விசாரணை கைதி அருணாச்சலம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அளித்த மரண வாக்குமூல வீடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் கண்டனம்

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,
“தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.

அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது.

மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா?

எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

Source link