விசாரணை கைதி அடித்துக் கொலை? தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி விளக்கம்

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம். கடந்த 17-ம் தேதி காலையில் சட்டவிரோ மது விற்பனை தொடர்பான விசாரணைக்கு தென்பாகம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலையே அவர் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில், அருணாச்சலம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த சபரிவர்மன்,33, என்ற மாற்றுத்திறனாளி, குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். 

அவரது உடலில் 19 காயங்களில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் அருணாச்சலம் என்கிற விசாரணை கைதி போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி விளக்கம்

இந்நிலையில், விசாரணை கைதி அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலைய போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி சுனில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜூலை 17ம் தேதி விசாரணைக்காக அருணாச்சலம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது திடீரென அருணாச்சலம் மயங்கி விழுவே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். 

பின்னர் பெற்றோர்கள் மற்றும் காவலர்கள் உதவியுடன் அருணாச்சலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் அருணாச்சலம் மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு தலையில் கட்டி இருப்பதாக கூறினார்கள். அவரை அடிக்கவில்லை. இது லாக்கப் டெத் கிடையாது.” என்று கூறியுள்ளார். 

லாக்அப் அறைக்குள் இளைஞர் மயங்கி விழுந்த சி.சி.டி.வி காட்சி

இதனிடையே, விசாரணை கைதி அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலைய போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், அவர் லாக்அப் அறைக்குள் மயங்கி விழுந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. 

கனிமொழி கண்டனம் 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. 

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான். நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.” என்று கூறியுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம் 

தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். 



Source link