தமிழகத்தின் துடிப்பான ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக பணிபுரிந்த இவர் அங்கு மணல் கடத்தல், எம் சாண்ட்- ஜல்லி கற்கள் கடத்தும் கும்பலுக்கு சவாலாக விளங்கினார். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனுமதி பெறாத குவாரிகளில் இருந்து முறை கேடாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட கனிம வளங்களை பெருமளவில் தடுத்து நிறுத்தினார். இதனால் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி கட்டுக்குள் வந்தது. விபத்துகளும் குறைக்கப்பட்டன.
விழிப்புணர்வு அதிகமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கலெக்டர் அல்லது எஸ்.பி சிறப்பாக பணிபுரிந்து பொதுமக்களிடம் பாராட்டு பெறுவது சுலபம் அல்ல. ஆனால் ஸ்டாலின் ஐ.பி.ஸ்-க்கு குமரி மக்கள் ஆதரவையும் நம்பிக்கையையும் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் அவர் அங்கிருந்து சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றல் பின்னணியில் கனிம வள மாபியா தலையீடு இருப்பதாக நாகர்கோவிலைச் சேர்ந்த பலரும் புகார் கூறி வந்தனர்.
ஆனால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் மீண்டும் தென் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அக்டோபர் 29 ஆம் தேதி (இன்று) உள் துறைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் தென்காசி மாவட்ட எஸ்.பி யாக ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரியை போலவே தென்காசியும் கேரள எல்லையோர மாவட்டம் ஆகும். எப்படி கன்னியாகுமரி வழியாக கனிம வளங்கள் கடத்தப்பட்டதோ, அதேபோல நெல்லை, தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாகவும் கேரளாவுக்கு கனிம வளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டே வந்தன.
விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த கடத்தல் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னமும் அவ்வப்போது அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தல்காரர்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக புகார்கள் எழுகின்றன. இவற்றை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாகவே ஸ்டாலினை தமிழக அரசு தென்காசி எஸ்.பி யாக நியமனம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தென்காசி எஸ்.பி யாக பொறுப்பேற்று செயல்பட இருப்பதை கனிம வளக் கொள்ளைக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
