புதுடில்லி: தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.க., அரசில் காங்., பங்கெடுத்த பின், தமிழக முதல்வர் விஜயும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர். இரு வாரங்களுக்கு மேல், வெளிநாடு சென்று டில்லி திரும்பினார் ராகுல். வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம், டில்லி பிரதிநிதியாக தமிழகத்தில் பிரவீன் சக்கரவர்த்தியை நியமனம் செய்தது தான். ‘இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், காங்கிரசின் டில்லி பிரதிநிதி பிரவீன் தான்’ என்கின்றனர் காங்., தலைவர்கள்.
சமீபத்தில், காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்த போது, பிரவீன் சக்கரவர்த்தியின் மொபைல் போன் வாயிலாக விஜயிடம் பேசிய ராகுல், ‘அடுத்த மாதம் நடக்கும், ‘இண்டி’ ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும்’ என, வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இண்டி கூட்டணியில் தி.மு.க., உள்ளவரை நாங்கள் வர மாட்டோம்’ என, கறாராக சொல்லி விட்டாராம் விஜய்.
சமீபத்தில், காங்கிரசை சேர்ந்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சென்னை வந்து, முதல்வர் விஜயை சந்தித்து, கேரளாவின் போதை பொருள் தடுப்பு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். இதன் பின்னணியில் ராகுலின் திட்டம் உள்ளது.
தென் மாநிலங்களில் காங்., ஆட்சி செய்யும் முதல்வர்களான கேரளா -சதீஷன், தெலுங்கானா- ரேவந்த் ரெட்டி, கர்நாடகா -சிவகுமார் ஆகிய மூவருடன், தமிழக முதல்வர் விஜயும் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறார் ராகுல். 2029 பார்லி., தேர்தலில், இந்த மாநிலங்களில் விஜய் பிரசாரம் செய்தால், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ராகுலின் திட்டம்.
ஆனால், மேகதாது அணை விவகாரத்தில், தமிழகம் – கர்நாடகா இடையே பிரச்னை புகைந்து கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரசுக்கு விஜய் பிரசாரம் செய்வாரா என்பது கேள்விக்குறி.
