தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : முதல்வர் விஜய் வாழ்த்து!

தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்குத் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 2024ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (18.07.2026) அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் தனுஷுக்குச் சிறப்புப் பிரிவில் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகை விருதும்,  அறிவிக்கப்பட்டுள்ளது. “மெய்யழகன்” திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹர சுதனுக்கும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகும். வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link