தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று முன்தினம் இரவில் 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டுச் தப்பியோடிச் சென்ற நிலையில், நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு தப்பியோடியவர்களில் 13 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் இருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். மற்ற இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில் 200 கைதிகள் மட்டுமே அடைப்பதற்கான வசதியுள்ள நிலையில், 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்துள்ளனர். ஒரே அறையில் 17 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாக சிறைக் காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே நிலையில் 4 காவலர்களை தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தப்பியோடியவர்களைக் கைது செய்ய 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நக்சல் சிறப்பு பிரிவினரும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள மலை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்குள்ளான காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
17 கைதிகள் தப்பியோடிய நிலையில், தமிழக கேரள எல்லை குமிழி, கம்பம், போடிமெட்டு பகுதியிலும் தேடுதல் பணி நடைபெற்றது. சிறை வளாகத்திற்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் மதுரை பெருங்குடியை சேர்ந்த பிரவீன் என்கிற கைதி முதலில் பிடிபட்டார். அதைத்தொடர்ந்து, தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இதேபோல மதுரையை சேர்ந்த ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 9 சிறைத் துறை காவலர்களை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சிறைப் பாதுகாப்புப் பணியில் 17 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இதற்கிடையே, 4 கைதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மாற்றுத் திறனாளியான லிங்கபிரசாத் என்பவரும் பிடிபட்டார்.
இதற்கிடையே தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகளை ட்ரோன் மூலம் கண்காணித்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறையில் இருந்து தப்பிச் சென்று நேற்று முதலில் பிடிக்கப்பட்ட 5 பேர் மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கானா விலக்கு காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் 5 பேரிடமும் மாவட்ட எஸ்பி விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் நேற்றே பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களைப் பிடிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால், கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள இருவரை தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
