“தேர்தல் ஆணைய விவகாரம்”; முதல்வரை பழி வாங்குகிறதா பாஜக அரசு?

ஒன்றிய பாஜக அரசு, தன்னை பழிவாங்குவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கவலை தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில், பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் சுமார் 3 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். அதோடு, அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பகவந்த் மான் தரப்பில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்தல் ஆணைய முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் (எஸ்.ஐ.ஆர்)  தொடர்பாகத் தாம் விமர்சனம் செய்ததால், தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதனிடையே, சோதனையின்போது அங்கிருந்த அதிகாரிகள், தங்களுக்கு மேலிடத்திலிருந்து கடுமையான அழுத்தம் தரப்படுவதாகக் கூறியதாக, ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பால்டேஜ் பண்ணு தெரிவித்துள்ளார்.  

டெல்லி விமான நிலைய சுங்கத்துறைத் தலைவர் மணீஷ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் சொந்த சகோதரர் ஆவார். எனவே, இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருப்பதாக முதல்வர் பகவந்த் மான் குறிப்பிட்டுள்ளார்.