தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள புகார் தற்போது காவல் துறை விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.4.5 கோடி பணம் வழங்கியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனவிமல் அளித்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது அ.தி.மு.க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னை தொடர்பு கொண்டு தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி வழங்க வேண்டும் என கேட்டதாக தனவிமல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும் பணத்தைத் திருப்பி வழங்குவதாக விஜயபாஸ்கர் உறுதி அளித்ததாகவும், இதை நம்பி பல்வேறு வழிகளில் ரூ.4.5 கோடியை திரட்டி, 2026 மார்ச் 11-ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் முருகேசனின் அலுவலகத்தில் அந்தப் பணத்தை வழங்கியதாகவும் மனுவில் தனவிமல் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வெளியான பிறகு பணத்தைத் திரும்பக் கேட்டபோது ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகையை பலமுறை கேட்டும் வழங்கவில்லை என்றும் தனவிமல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பணத்தைப் பெறுவதற்காக விஜயபாஸ்கரை 14 முறை நேரில் சந்தித்தும் முழுத் தொகை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பணம் மற்றும் ஆவணங்களைத் திரும்பக் கேட்கும்போது விஜயபாஸ்கர் மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தனவிமல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், தனவிமல் அளித்த புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக செப்டம்பர் 10-ம் தேதி ஆஜராகுமாறு தனவிமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்தது.
Also Read: LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களே கவனம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Next Post
Tue Sep 8 , 2026
ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் விலை லிட்டர் 2 டாலருக்கும் கீழே குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களாலேயே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை முடிவுக்கு வந்தவுடன் சந்தை […]

