சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றது தொடர்பான தேர்தல் வழக்கில், தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய்க்கு, புதிதாக நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர் தொகுதியில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.டி.சேகரும், தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும், தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள், உயர் நீதிமன்றத்தில், நீதிபதி லட்சுமி நாராயணன் முன், விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆர்.டி.சேகர் தரப்பில், ‘வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு, புதிதாக மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
