தேவாவின் ஆர்மோனியச் சத்தம் அழைத்ததா சகோதரா? – வைரமுத்து இரங்கல்!

பிரபல பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். தமிழில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அண்மையில் மறைந்த தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது ஆஸ்தான பாடகராகவும் இருந்து வந்தார். இந்த சூழலில் தேவா மறைந்து சில நாட்களிலே இவரும் மறைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’, ‘வெள்ளரிக்கா வெள்ளரிக்கா’, ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்’, ‘மீசக்கார நண்பா(சோகம்)’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஈச்சி எலுமிச்சி’(தாஜ்மஹால்), யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘அய்யய்யோ’(பருத்திவீரன்), ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’(கழுகு) உள்ளிட்ட ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். கடைசியாக ஜிவி பிரகாஷ் இசையில் ‘நாலு நிமிஷம்’(சூரரைப் போற்று) பாடலை பாடியிருந்தார். 

இதையடுத்து 5 ஆண்டுகளாக பாடாமல் இருந்த அவர் கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே பாடல் பாடி உலகப் புகழ்பெற்றவரும் போய்விட்டாரே! தஞ்சாவூரு மண்ணுஎடுத்து பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் மண்ணோடு மறைந்துவிட்டாரே. இப்படி விரைவாய் எப்படி மறைவாய்? தேவாவின் ஆர்மோனியச் சத்தம் அழைத்ததா சகோதரா?

இவர் பாடிய பிறகு எஸ்.பி.பி-யைப் பாடவைக்கலாம் என்ற பேச்சு வந்தது. ‘இல்லை தேவா; இல்லை. கிருஷ்ணராஜ் குரலில் பிசைந்த மண்ணின் பிசுபிசுப்பு இருக்கிறது. இவர்குரலே இருக்கட்டும்’ என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இதயத்தில் இசைத் தட்டாய்ச் சுற்றிக்கொண்டே இருந்தது கிருஷ்ணராஜ் பாடிய பாட்டு. ‘இத்தனை ஊரை எழுதியிருக்கிறீர்களே; இதில் ஏதோ ஒன்றுதானே என் சொந்த ஊர்’ என்று தளும்பும் குரலில் கேட்டார் ஜனாதிபதி. அவரது இறுதிச் சடங்கில் அதிகாரபூர்வமாக ஒலித்த பாட்டு இது. ஒரு சுத்தத் தமிழன் பாடிய பாட்டு என்பது ஒவ்வொரு சொல்லின் தெறிப்பிலும் உணரப்படும். இசையமைத்த தேவா போய்விட்டார்; இப்போது பாடகரும் போய்விட்டாரே. எல்லா ஊரிலும் மண்ணெடுத்த நீ வாழ்வூரை விட்டுச் சாவூரில் மண்ணெடுத்துவிட்டாயே. நினைவழிந்து அமர்ந்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஒரே பாடல் பாடி
உலகப் புகழ்பெற்றவரும்
போய்விட்டாரே!

தஞ்சாவூரு மண்ணுஎடுத்து
பாடலைப் பாடிய
கிருஷ்ணராஜ்
மண்ணோடு மறைந்துவிட்டாரே

இப்படி விரைவாய்
எப்படி மறைவாய்?

தேவாவின்
ஆர்மோனியச் சத்தம்
அழைத்ததா சகோதரா?

இவர் பாடிய பிறகு
எஸ்.பி.பி-யைப்
பாடவைக்கலாம் என்ற
பேச்சு வந்தது

“இல்லை… pic.twitter.com/7kmJeSo715