தொடரும் வெட்டி வேர் சாகுபடி மோசடி – குமுறும் திருவண்ணாமலை விவசாயிகள் – following the emu poultry scam, the ongoing vetiver cultivation scam: thiruvannamalai farmers lament

திருவண்ணாமலை மாவட்டம் விவசாய நிறைந்த மாவட்டம். மாவட்டத்தின் முக்கிய தொழில் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விவசாயத்தை நம்பியே மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டங்களை தேர்வு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்ட ஆரோ மேட்டிக் ரூட் குயின் பார்மா ப்ராடக்ட் எல்எல்வி நிறுவனம் தமிழகம் முழுவதும் விவசாயிகளை மூளைச் சலவை செய்து 1 லட்சம் ரூபாய் செலவு செய்தால் 5 முதல் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி விவசாயிகளை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக விவசாயிகள் மட்டுமின்றி படித்த இளைஞர்களையும் youtube இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி ஆசைகளை தூண்டி இது போன்ற வெட்டிவேர் விவசாயத்தை தன்வசமாக்கியது.

உரம் தருவதாக கூறி விவசாயகளிடம் நூதன மோசடி

வெட்டிவேர் விவசாயம் செய்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தலாம் என பல்வேறு கதைகளைக் கட்டி விட்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை தேர்வு செய்து தினந்தோறும் அவர்களுக்கு வீட்டிற்கும், விவசாய நிலத்திற்கு சென்று மூளை சலவை செய்து ஒரு பேக்கிற்கு 100 ரூபாய் என குறைந்தபட்சம் ஒவ்வொரு விவசாயியும் 1000 பைகள், 2000 பைகள், 3000 பைகள் என லட்சக்கணக்கான ரூபாயை விவசாயிகளிடம் வசூல் செய்து அவர்களுக்கு உரம் தருவதாகவும் தினசரி கண்காணிப்பதாகவும் கூறி வெட்டிவேர் விவசாயத்தை செய்ய வைத்துள்ளனர்.

பணம் வசூல் செய்யும் வரை அடிக்கடி வந்து செல்லும் ஏஜென்ட்

பணம் வசூல் செய்யும் வரை அடிக்கடி வந்து செல்லும் ஏஜென்ட், வெட்டிவேர் கொடுத்து விவசாயம் செய்தது உடன் அந்தப் பக்கம் கூட வந்து பார்ப்பதில்லை என விவசாயகள் குமுறுகின்றனர்.

திருவண்ணாமலைமாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வெட்டிவேர் பயிர் செய்து தற்போது அறுவடை காலம் வந்து பல மாதங்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அதனை தங்களிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெட்டி வேர் கொள்முதல் செய்யாமல் காலதாமதம் செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழ்பெண்ணாத்தூரில் லாரியை சிறைபிடித்து போராட்டம்

கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி தான் பணம் கொடுத்த ஏஜென்ட் சுரேஷை மடக்கி அவரது வண்டியை பறிமுதல் செய்து எனது வெட்டி வேரை கொள்முதல் செய்தால் தான் விடுவேன் என கூறியுள்ளார். காவல் நிலையம் வரை சென்ற நிறுவனத்தினர் அந்த விவசாயி பயிர் செய்த வெட்டிவேரை மட்டும் கொள்முதல் செய்ய லாரி அனுப்பி உள்ளனர்.

கொள்முதல் செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்ற வெட்டிவேர் ஏற்றிய லாரியை பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கீழ்பெண்ணாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிந்திய விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமையிலான தென்னிந்திய விவசாய சங்கத்தினர் விவசாயிகளுக்கு ஆதரவாக வெட்டிவேர் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை மடக்கி சிறை பிடித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் வெட்டி வேர் விவசாயம் செய்யும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வெட்டிவேரை முழுமையாக கொள்முதல் செய்து பணம் தர வேண்டும் என்று வலியுறுத்தயுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராடினாலும் காவல் நிலையத்திற்கு வந்து விவசாயிகளிடம் சமாதானம் செய்து லாரியை மீட்கும் முயற்சியில் சம்பந்தபட்ட நிறுவனம் இறங்கி உள்ளதாக தென்னிந்திய விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே ஈமு கோழி உற்பத்தி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் மீண்டும் விவசாயிகளை குறி வைத்தே வெட்டிவேர் விவசாயம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Source link