கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில், தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று (23-10-26) வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (23-10-26) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
