பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசஞ்சி ‘ஆரா இந்தியா டூர்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இம்மாதம் தொடங்கி டிசம்பர் வரை டெல்லி, மும்மை, பெங்களூரு உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான நகரங்களில் இந்நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக டெல்லியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி ஜவர்ஹலால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனையை ‘புக் மை ஷோ’ நிறுவனம் கையாண்டது. டிக்கெட்டும் விறுவிறுவென விற்பனையானது. ஆனால் நவம்பர் 1ஆம் தேதி 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்த நிலையில் அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும்படி கோரிக்கை எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பின்பு அக்டோபர் 30ஆம் தேதிக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது. நவ.1ஆம் தேதி வழங்கிய டிக்கெட்டே இதற்கும் செல்லும் எனவும் புக் மை ஷோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் அக்டோபர் 30ஆம் தேதிக்கு காவல் துறை அனுமதி தர மறுத்தது. இது தொடர்பாக டெல்லி தெற்கு மாவட்ட துணை காவல் ஆணையர் புக் மை ஷோக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது, பண்டிகைக் காலத்தினால் நாங்கள் கூடுதல் பாதுகாப்புப் பணியில் இருக்கிறோம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிற முக்கியக் காரணங்களால் அனுமதி தர முடியாது. அதே போல் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் உங்கள் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆத் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சௌரப் பரத்வாஜ் பாஜக தலைமையிலான அரசாங்கமும் டெல்லி காவல்துறையும் வீரமிக்க பஞ்சாபியர்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஆம் ஆத்மி கட்சி அற்பமான அரசியல் செய்வதாகக் கூறியிருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சி விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.
இதனிடையே புக் மை ஷோ நிறுவனம் காவல் துறையிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாகப் பின்பற்றுவதாக புக் மை ஷோ தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு காவல் துறையினர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதனால் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிட்டது போல அக்டோபர் 30ஆம் தேதி ஜவர்ஹலால் ஸ்டேடியத்தில் எந்த தடங்களும் இன்றி நடக்கவுள்ளது.
