பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் மூலம் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெகமம் பகுதியில் கொப்பரைகளை உலர வைக்க தேவையான வெயில் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கொப்பரை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தேங்காய்கள் ஆங்காங்கே களங்களில், தோப்புகளில் தேங்கி உள்ளன.
சில இடங்களில் மழையில் நனையாமல் இருக்க கொப்பரைகளை தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: பருவமழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொப்பரைக்கு வெளிமார்க்கெட்டில் எதிர்பார்த்த விலையும் இல்லை. மழையால் பல இடங்களில் கொப்பரை உற்பத்தி களங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
இதனால் வேலைவாய்ப்பு குறைந்து தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர். தேங்காய் பறிப்பவர்கள், தேங்காயை எடுத்து வாகனங்களில் ஏற்றுபவர்கள், தேங்காய்களை உடைத்து கொப்பரைக்காக காய போடுபவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரைகளை மூடைகளில் நிரப்புபவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேர் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர்.
தோப்புகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, அரசு மழைக்கால நிவாரண தொகை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
