“தொடர் வேலைநிறுத்தம்” – நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு!

நியாயவிலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி நவ.2,3,4 தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா சிதம்பரத்தில் புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது:  தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல் பலதுறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும், கல்வித் தகுதியற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராத சூழ்நிலையில் கடந்த அக்.9ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தி எவ்வித தீர்வு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கோரிக்கைகள் குறித்து இது நாள் வரை எந்தவித முன்னேற்றமான செய்தியும் வெளிவராத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டமாக நவ.2,3,4 தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதாவது +2 கல்வித் தகுதியுடைய விற்பனையாளருக்கு இன்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் நிலவி வருகிறது. 

அதேபோல் 10வது கல்வித் தகுதியுள்ள எடையாளருக்கும் கிராம உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் +2 கல்வித் தகுதியுடைய விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளர் ஊதியம் வழங்கப்பட வேண்டும், 10வது கல்வித் தகுதியுடைய எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும், 9வது ஊதிய மாற்றக்குழுவில் நியாய விலைக்கடை பணியாளர் சேர்க்கப்பட வேண்டும். பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருள்கள்  அனைத்தும் சரியான எடையில் வழங்குவதற்கு ஏதுவாக விற்பனை முனையத்தையும், எடை தராசும் இணைத்து சரியான எடையில் பொருள்கள் வழங்குவதற்கு ஆவன செய்துள்ளார்கள். ஆனால், நியாய விலைக்கடைகளில் இறக்கப்படும் அத்தியாவசிய பொருகள் அனைத்தும் சரியான எடையில் வழங்குவதில்லை. 

ஆகையால், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக எடை தராசும், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் புளுடூத் முறையில் இணைத்து சரியான எடையில் அனைத்து பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும், நியாய விலைக்கடை பணியாளருக்கு தனியாக நிதி ஒதுக்கி மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 10,000/- வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும், அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்” என்றார் கோ.ஜெயச்சந்திரராஜா.