“த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது.

அந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று காலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மைத்ரேயன் கையெழுத்திட்ட பின்பு அடையாறு இந்திரா நகர் வழியே அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரை மறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மைத்ரேயன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, மைத்ரேயனை கொலை செய்த ஜீவா, அசாரூதின் இரண்டு பேர் தாமாக முன்வந்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாகவும், ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை. இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.