த.வெ.க கட்சி கொடி கலர்… இதுதான் சென்னை மாநகர புதிய பஸ்? இணையத்தை கலக்கும் புகைப்படம்

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக பிரத்யேகமாக பாடி கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துகள் சிலவற்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. இணையத்தில் வைரலாகும் அந்தப் புகைப்படங்களில் உள்ள பேருந்துகள், த.வெ.க கட்சியின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

“மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு ஆளுங்கட்சியின் நிறத்தைப் பூசி விளம்பரம் தேடலாமா?” என்று ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, “இது கட்சியின் நிறம் கிடையாது; ஏற்கனவே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த பழைய பேருந்துகளின் வண்ண அமைப்பைப் போன்றதே இது” என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் அந்தப் புகைப்படத்தில் ‘மாநகர போக்குவரத்து கழகம் சென்னை’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ள போதிலும், அந்தப் படங்களின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்த முதல்வர் விஜய் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் விளம்பரங்கள் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Source link