“த.வெ.க.வினரை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்” – உதயநிதி!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்  மதிப்பு பல கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதாவது இந்த போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வழக்கறிஞர் பூபாலன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் இந்த கடத்தல் அரங்கேறியதாகவும் தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து பூபாலன், சுகன் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் பூபாலன் என்பவர் தவெக நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் பூபாலன் தவெக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் நாகை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் பின்னர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதனையடுத்து அக்டோபர் 30ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 5 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில் சூழலில் த.வெ.க. நகரச் செயலாளர் பாலு என்பவர், இது குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கால் செய்துள்ளார். அதில், “இதுதான் கடைசி எச்சரிக்கை. இனி செய்தி வெளியிட்டால் காலி செய்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பத்திரிகையாளர் மன்றம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி த.வெ.க. நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் த.வெ.க. நகரச் செயலாளர் பாலு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாகச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் – பத்திரிகையாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?. கட்சியா இல்லை நார்கோஸ் (Narcos) கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் நெட்ஒர்க்கின் (Network) அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த டம்மி (Dummy) முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே போதைப்பொருள் கடத்தல்காரர்களும், கார்டெல் மாஃபியாவும் (Cartel Mafia) சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். ரீல்ஸ் (Reels) எடுப்பதிலேயே காலத்தைக் கழிக்காமல் கொஞ்சம் ரியலிட்டிக்கு (Reality) வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் – அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்” எனத்  தெரிவித்துள்ளார்.