“நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” புதிய தலைமைச் செயலக இடம் தேர்வு குறித்து கனிமொழி சரமாரி கேள்வி

தமிழகத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை தமிழக வெற்றி கழக (தவெக) அரசு மேற்கொண்டு வருகிறது. சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டடத்தை எழுப்புவதற்கு பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இருப்பினும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் மீனவர்களின் வாழ்வாதார ரீதியாகவும் மிக முக்கியமான பட்டினப்பாக்கப் பகுதியில் இவ்வளவு பெரிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு எந்த அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு அரசுத் துறை அளித்துள்ள பதிலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த பதிலைச் சுட்டிக்காட்டி திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் த.வெ.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ” புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைச் சரமாரியாக முன்வைத்துள்ளார்.

முன்னதாக, போதிய கள ஆய்வுகளோ சுற்றுச்சூழல் மதிப்பீடுகளோ இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. தற்போது, இதற்கான எவ்வித ஆய்வு விவரங்களும் அரசிடம் இல்லை என்று ஆர்.டி.ஐ பதிலில் தெரியவந்துள்ளதால், இந்த முடிவின் பின்னணியில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து அரசியல் தளத்தில் பெரும் விவாதமும் கேள்விகளும் வெடித்துள்ளன.



Source link