கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் விஜய் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி பட்டினப்பாக்கத்தில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் அந்த பகுதியில் சட்டமன்ற கட்டிடத்தை அமைக்கக் கூடாது, இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல அரசியல் கட்சிகளும் பட்டினப்பாக்கத்தில் சட்டப்பேரவை கட்டிடம் அமைவதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு அளித்துள்ள பதிலை வைத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.
அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
