நமது நிருபர்
”புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது; நமது வெற்றி தொடரட்டும்” என முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மகிழ்ச்சியுடன், ஒரு புதிய எனர்ஜியுடன் உங்கள் முன்னால் நிற்கிறேன். தொகுதி மறுவரையறை எனும் கருப்புச் சட்டத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.
மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்ட நகலைக் கொளுத்தினேன். 50, 60களில் பார்த்த பழைய திமுகவைப் பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன். “அப்படி என்றால் என்ன?” என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு, “இதுதான்டா திமுக பாருங்கள்” என்று நேற்று ஸ்ட்ராங்காகக் காட்டியிருக்கிறோம்.
என்னுடைய சல்யூட்
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பாஜவுக்குச் சாதகமாகக் கொண்டு வரப்பட்ட கருப்புச் சட்டத்தை, பார்லிமென்டில் தோற்கடித்த அனைவருக்கும் தமிழக முதல்வராக என்னுடைய நன்றி; முக்கியமாக, இதில் முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழக மக்களுக்குத்தான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை சொல்லணும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற மாறு விஷயத்தில இந்த சட்டத்தை பாஜ கொண்டுவர பார்த்தாங்க. ஆனா இந்த ஏமாற்று திட்டத்தை முன்னாடி நின்னு தோற்கடிச்சதே பெண்கள்தான். அவங்களுக்கு என்னுடைய சல்யூட். இண்டி கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளின் எம்பிக்களும் ஒன்றாக சேர்ந்து நின்ன காரணத்தினால இது சாத்தியமானது. பாஜ இனி நாடு முழுக்க பெறப்போற தோல்விக்கான தொடக்கம் இது.
துரோகிகள்
எதிர்கட்சிகளின் ஒற்றுமைகளுக்கான தொடக்கம் இது. நாம் ஒன்றுபட்டால் வெற்றி உறுதி என நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை என காட்டியிருக்கும் தொடக்கம் இது. மகிழ்ச்சியான இந்த நேரத்தில், இந்தத் தொகுதி மறுவரையறைச் சட்டம், யாரெல்லாம் நம் நண்பர்கள் என மட்டும் அடையாளம் காட்டவில்லை.
தமிழகத்தின் துரோகிகள் யார் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது. அப்படித் துரோகம் செய்த இபிஎஸ்யின் அடிமைக் கும்பலுக்குத் தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது. இபிஎஸ் டில்லியின் ஏஜெண்ட் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
அடிமை
நம்முடைய திராவிட இயக்க வரலாறு என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்திற்குப் போராடி, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது திமுக. எப்போதெல்லாம் ஹிந்தித் திணிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உறுதியாகப் போராடி வென்றது திமுக. அதே போன்றுதான், நேற்று தமிழகத்தின் உரிமைகளை, பிரதிநிதித்துவத்தைத் தடுக்க நினைத்ததைப் போராடி வென்றிருக்கிறது திமுக.
இந்தியாவே இன்றைக்கு திமுகவை பற்றி உயர்வாகப் பேசுகிறது. நம் வெற்றிகள் தொடரட்டும், தொடரும். தமிழக மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுகவுக்கும் 2026 சட்டசபை தேர்தலில் மறக்கவே முடியாத தோல்வியைக் கொடுப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
