நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்; முதல்வர் பாணியில் மாணவர்களுக்கு தெம்பூட்டிய அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி, அரசுப் பள்ளி மாணவ மாணவியர்க்கான கல்லூரிக் களப்பயணம் – 2026 என்ற நிகழ்ச்சியை அமைச்சர் ராஜ்மோகன் துவங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: நாம் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்து வேண்டுமென்றாலும் வரலாம். கனவை நோக்கி உழைத்தால் நாமும் வெற்றி பெறலாம்.

இந்த அரங்கில் மட்டும் 500 மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு அப்பா இல்லை; சில குழந்தைகளுக்கு அம்மா இல்லை; சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய, உயர்கல்விக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

என்ன இல்லை என்பதை விட என்ன இருக்குன்னு யோசிங்க; நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய வெற்றி தலைவர் அந்த நம்பிக்கையில் தான் என்னை கைபிடிச்சி தூக்கி விட்டார். அவர் சொன்னதையே சொல்றேன். நம்பிக்கையுடன் இருங்கள்.

வெற்றி நிச்சயம். உலகத்திலேயே ரொம்ப டென்ஷன் ஆன ஒரு இடம் இருக்கிறது. பப்ளிக் எக்ஸாம் படிக்கிற பசங்க வீடு தான். வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் கூட, என்ன படிக்கிற, பப்ளிக் எக்ஸாம் எழுதப் போறியா, பாஸ் ஆயிருவியா என பயமுறுத்துவார்கள்.

ஏதோ தீவிரவாதிகளை அணுகுவதை போல மாணவர்களிடம் நடந்து கொள்வார்கள். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். 10ம் கிளாஸ் தாண்டுறதுக்கு நான் பட்ட பாடு. 12ம் வகுப்பில் பாஸ் பண்ணது எல்லாம் உலகத்தின் எட்டாவது அதிசயம். நான் இன்ஜினியரிங் சேர்ந்து விட்டேன். நமக்கு தமிழை தவிர எதுவுமே வராது, இன்ஜினியரிங் பசங்கள பாத்து பயந்தேன்.

நாம் பயன்படுத்தும் பொருட்களை கண்டுபிடிப்பது தான் இன்ஜினியரிங். அவ்வளவுதான். புரிந்து படித்தால் எதையும் எளிதாக வெல்லலாம். மிகவும் வறுமை நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்து, தமிழ் வழியில் படித்து வந்த அப்துல் கலாம் மிகப்பெரிய அணு விஞ்ஞானியாக ஆனதை மாணவர்கள் மோட்டிவேஷனாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

Source link