உலகிலேயே முதன்முறையாகத் தங்கத்தாலான நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. உலகின் வர்த்தக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்கும் துபாய், தங்க நகைகளின் கூடாரமாகத் திகழ்கிறது. இங்குத் தங்கம் வாங்க வரிகள் கிடையாது என்பதால், தங்க ஆபரணங்களின் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. குறிப்பாக வரிகள் இல்லாத காரணத்தினால் தங்கத்தின் விலை மிகக் குறைவாக உள்ளது. அதனால், விற்பனைக்காக வெளிநாடுகளிலிருந்தும் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. வரிகள் இல்லாமல் தங்கம் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், உலகின் பல நாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இதனால், துபாயின் டேரா பகுதியில் ’தங்க மாவட்டம்’ இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. எனவே தங்க வணிகத்தின், மொத்த விற்பனை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் இங்கு இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த தங்க நகரத்தை மேலும் மெருகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் பிரமாண்ட ’தங்க நடைபாதை’ தயாராகி வருகிறது. உலகின் மிக நீளமான, 24 கேரட் தங்கத்தினாலான பாதை இதுவாகும். இந்த பாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அதாவது, இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தும் சூழலில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட மக்கள் தங்க நகை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், நடப்பதற்குப் பாதை தங்கத்தால் உருவாக்கப்படுவது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இணைய வாசிகள் சிலர், நம்மால் திருமணத்திற்குக் கூட தங்க நகை வாங்க முடியாமல் தவிக்கிறோம். ஆனால், இவர்கள் நடப்பதற்குக் கூட தங்கத்தினால் பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களே? என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
