கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காவல் துறையினர் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சில நேரங்களில், நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப்போய், மேலோட்டமான தகவல்களைக் கேட்டு, பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், சமீபகாலமாக நாம் காணும் நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பரவி வரும் காணொளிகள் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.
நம் சமூகம் இன்னும் எவ்வளவு பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதை இவை காட்டுகின்றன. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான வன்முறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்குத் தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது? அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையை மேம்படுத்த ஒரு பேச்சுவார்த்தையை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள். வேறு யாரும் குரல் கொடுக்காத நிலையில், தமக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களுடன் நான் துணை நிற்கிறேன். உயிர்கள் பறிபோவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, நடப்பவை எதுவும் சரியல்ல.
நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம், ஆனால் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது. சில நேரங்களில் மௌனம் பலனளிக்காது. நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகக் குரல் கொடுப்பதற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
