நல்லாசிரியர் மறைவுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்திய பிஞ்சுகள்; பக்கத்தில் இருந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகள் இன்றும் முன்மாதிரிப் பள்ளிகளாக உள்ளது என்றால் அதற்கு சில ஆசிரியர்களின் முயற்சியும், உழைப்பு, பெற்றோர்கள், சக ஆசிரியர்களின ஒத்துழைப்பும் காரணமாகிறது. இப்படித் தான் ஆவணத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராக இருந்த பாஸ்கர், கிராமப்புறங்களில் இருந்து வரும் தன் பள்ளி குழந்தைகளுக்கு பாடங்களை நடத்துவதை கடந்து எழுத்து, பேச்சு, வாசிப்பு, விளையாட்டு என அந்த மாணவர்களிடம் ஒழிந்து கொண்டிருந்த அத்தனை தனித்திறன்களையும் வெளிக் கொண்டுவந்து சாதிக்க வைத்து பெருமைப்பட்டார்.

அறிவியல் படைப்புகளில் ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை, திறனாய்வுத் தேர்வுகளில் சாதனை இப்படி எண்ணற்ற சாதனைகளை தன் மாணவர்களால் படைக்க வைத்தார் ஆசிரியர் பாஸ்கர். பள்ளி மாணவர்களின் திறனைப்  பார்த்து பக்கத்து கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இப்பள்ளியில் சேர அவர்கள் வந்து போக வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கினார். இவரது சேவை பரவலானது. தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருதும் பெற்றார். தேசிய நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்ற சக ஆசிரியர்களாலும் பேசப்பட்டது. ஆனால் ஏனோ அந்த விருது கிடைக்கவில்லை.

இப்படியான நிலையில் தான பள்ளி விடுமுறை நாளான இன்று (17-10-26) அதிகாலை அறந்தாங்கியில் உள்ள தனது வீட்டில் பாத்ரூம் சென்றவர் வழுக்கி விழுந்தவர் எழவில்லை. சத்தம் கேட்டு ஓடிவந்து ஆசிரியர் பாஸ்கரை அவரது மனைவியும் பக்கத்தில் இருந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். ஆனால் அதற்குள் அவர் உயிர் பிரிந்திருந்தது. நல்ல ஆசிரியர் பாஸ்கர் உயிரிழந்தார் என்ற தகவல் பரவியதும் சக ஆசிரியர்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்த வந்தனர். 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்து அவரிடம் படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கைகளில் பூ மாலை கண்களில் கண்ணீரோடு வந்து கதறி அழுது புரண்டது அங்கிருந்தவர்களை மேலும் கலங்க வைத்தது. 

அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களும் கதறிக் கொண்டு வந்து கண்ணீர் வடித்தனர். நல்ல ஆசிரியராக இருந்து வழிகாட்டினீங்களே சார் என்று கதறினர். நல்லாசிரியர் என்பதை விட நல்ல ஆசிரியராக இருந்ததால் தான் ஆசிரியர் பாஸ்கர் உயிரிழந்த இந்த நேரத்தில் இத்தனை குழந்தைகள் வந்து கண்ணீர் வடித்து கதறுகிறார்கள். ஆனால் சற்று தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது பர்வேஸ், தன் தொகுதியைச் சேர்ந்த ஆசிரியருக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்த வரவில்லை என்பது மனது வலிக்கிறது என்கின்றனர் சக ஆசிரியர்கள். இனி வரும் காலங்களில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் இறுதி காலங்களில் அரசு மரியாதை செலுத்த இந்த புதிய அரசு நடவடிக்கை எடுத்தால் நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இறுதி நேரத்தில் மரியாதை கிடைக்கும் என்கின்றனர்.