பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.07.2026) காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூஅறிவித்தபடி, இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வுகளாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
அதாவது திமுக உறுப்பினர்கள் அனைவரும், தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து வந்து , மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழில் முழக்கங்களை எழுப்பி, “மேகதாது அணை மூலம் தமிழக விவசாயிகளை பாதிக்கக் கூடாது” என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதேபோல், காங்கிரஸ் உறுப்பினர்கள் நீட் தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதோடு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில், கேள்வி நேரம் தொடங்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதன்படி அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினர். தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்துக் கொண்டிருந்தபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அனைத்து உறுப்பினர்களும் மழைக்கால கூட்டத்தொடருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். ஆனால், முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்றும், ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதே போன்று மாநிலங்களவையிலும், உறுப்பினர்கள் இந்த விவகாரங்களை எழுப்பினர். இத்னையடுத்து தொடர் அமளி காரணமாக நண்பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய நிலையில் மீண்டும் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் இரு அவைகளும் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
