நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, தடியடி தாக்குதல், குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ராப் பாடகர் தெருக்குரல் அறிவு சென்னை தலைமைச் செயலகத்தின் முன் பாடல் பாடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் உட்பட அவருடன் வந்த நான்கு பேரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே காவல்துறையின் வன்முறைக்கு எதிராகவும், அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும் நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாத் தர்ணா செய்து வருகிறார்.
டெல்லியில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், லெனின் பாரது உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ரேவதி, “ஒரு பெற்றோராக, கல்வி என்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது என்று நான் நம்புகிறேன். கல்வியின் எதிர்காலம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தும் குரல்களுக்குக் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு கருத்தையும் நாம் ஏற்கிறோமோ இல்லையோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் என்பது ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கு உரியது.
அமைதியான பேரணியின் போது வன்முறை நிகழ்வது குறித்த செய்திகளைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்பு, வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். ஞானம், கருணை மற்றும் உரையாடல் ஆகியவை ஒவ்வொரு முடிவையும் வழிநடத்தட்டும். ஏனெனில், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அதற்கும் குறைவான எதுவும் போதாது. எங்களின் கோரிக்கை என்ன? நாட்டின் கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் குழந்தைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அது.
மாணவர்கள் தாக்கப்பட்டும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்று எண்ணி வளர்ந்த இளைஞர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடூரமான வன்முறையைக் கண்டு பெண்கள் கண்ணீர் சிந்துகின்றனர். தந்தையர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்கின்றனர். தங்களுக்கு இழைக்கப்படும் வன்முறையை நிறுத்துமாறு இளம்பெண்கள் கெஞ்சுகின்றனர். ஆனால், எங்கள் குழந்தைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை நம்பி நாங்கள் வாக்களித்த தலைவர்களோ மௌனம் காக்கின்றனர். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள், உரையாடுங்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அமர்ந்து பேசுங்கள். சோனம் வாங்சுக் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மாணவரின் குரலும் கேட்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
