நான் ரஜினி ஃபேன்; ஜனநாயகன் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு இல்லை: ஓபனாக பேசிய த.வெ.க அமைச்சர்

தளபதி விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், நான் ஒரு ரஜினி ரசிகன் அதனால் முதல்நாள் முதல் காட்சி ஜன நாயகன் பார்க்க வாய்ப்பில்லை என்று த.வெ.க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த தளபதி விஜய், கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டசபை தேர்தலில் தனி பெரும கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன், 7 மாத காத்திருப்புக்கு பிறகு வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாக உள்ளது த.வெ.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, 

எச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது அனைத்து தடைகளையும் கடந்து உலகம் முழுவதும் வரும் ஜூலை 23-ந் தேதி 30 நாடுகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளே படத்திற்கு சுமார் 6 கோடிக்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் முன்பதிவு பரபரப்பபாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் நாளை நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதனிடையே, தளபதி விஜயின் ரசிகர்களாக இருந்த பலரும் தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், ஜன நாயகன் படம் வெளியாகும் நாளில் பழைய விஜய் ரசிகர்களாக முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலாக இருக்கும் நிலையில், த.வெ.க அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் அருண்ராஜ், தான் ஒரு ரஜினி ரசிகன் என்பதால், ஜன நாயகன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், முதல்வர் விஜயின் கடைசி படம் வெளியாகிறது என்பது ரொம்பவும் எமோஷ்னலாக இருக்கிறது. கடைசி நாள் படப்பிடிப்பின்போது, அவருக்கு பிரியா விடை கொடுக்கும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இது வேண்டாம் நான் ரொம்ப எமோஷ்னல் ஆகிவிடுவேன் என்று சொல்லி தவிர்த்துவிட்டார். இந்த படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். சினிமா மூலமாகத்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நான் கல்லூரியில் படிக்கும்போது ரஜினி ரசிகன் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். விஜய் சார் படமும் பார்த்துவிடுவேன். நாளை (ஜூ23) எனக்கு ஒரு நிகழ்ச்சி இருப்பதால் என்னால் முதல் நாள் முதல்காட்சி போக முடியாத சூழ்நிலை உள்ளது என்று அருண்ராஜ் கூறியுள்ளார்.

Source link