மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். அந்த வகையில் சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், “ரோமன்ஞ்சம், ஆவேசம் படங்களை பண்ண ஜித்துவுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது உடனே நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. பொதுவாக நான் கதை கேட்டால் அமைதியாக தான் கேட்பேன். ஆனால் ஜீத்து கதை சொன்னபோது 5 நிமிடத்திலே சிரிக்கத் தொடங்கி விட்டேன். அவ்வளவு ரசித்து கேட்டேன். அவர் ஒரு புது உலகத்தை இந்தப் படத்திற்காக உருவாக்கியுள்ளார்.
நஸ்ரியாவின் கேரக்டர் முழுமையாக எழுதப்பட்டிருக்கிறது. அதை இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். நஸ்லென் வரவு நல்வரவாக இருக்கட்டும். தமிழில் முதல் படமாக பண்ணுகிறார். இன்னும் நிறைய படம் பண்ணுவார். நான் சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது இது என் 48வது படம், ஆனால் இந்த படத்தின் பயணம் ஸ்பெஷலாக இருந்தது. எப்படி உங்களுக்கு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பிடித்ததோ அதே போல் இந்த படமும் பிடிக்கும். பொதுவாக என்னுடைய படங்களை யூகிக்கும்படி இல்லாதவாறு பார்த்துக் கொள்வேன். அதனால் இந்த படத்தை ஒரு கிரைம் த்ரில்லர் என சொல்லலாம் மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். அதில் ஒரு நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும். ழகரம் நிறுவனத்தின் முதல் படம் இது. ஆதனால் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். கேரளாவில் இருந்து நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். என்னால் நேரடியாக மலையாளத்தில் ஒரு படம் பண்ண முடியவில்லை. அதனால் தமிழில் இருந்து இது ஒரு கிப்ட்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. சரவணனாக இருந்து இப்போது மாஸ் ஹீரோவாக மாறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில், “நான் சரவணனாகவே இருக்க முடியாது. ரசிகர்கள் என்னைச் சூர்யாவாக தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் அவர்களுக்காக நான் சூர்யாவாக மாற வேண்டியிருந்தது. எனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தை கண்டறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ரசிகர்கள் காட்டுவது எவ்வித எதிர்பார்ப்புமற்ற உண்மையான அன்பு. அதனால் என்னால் எவ்வளவு உண்மையாகவும், இதயப்பூர்வமாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
பின்பு ஜோதிகாவுடன் 20-வது ஆண்டு திருமண விழாவை முன்னிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டது தொடர்பான கேள்விக்கு, “தொழில்ரீதியாகவும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, நான் ஒரு சிறிய முயற்சி எடுத்தால் அது எனக்கு பத்து மடங்காக அன்பு கிடைக்கிறது. ஒரு நடிகனாக நான் 1% உழைப்பைக் கொடுத்தால், ரசிகர்கள் எனக்கு 100 சதவீதம் அன்பைத் தருகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கடந்து, எத்தனையோ படங்கள் வந்த பிறகும் கூட, ‘பார்த்த முகம்தானே, இவன் புதிதாக என்ன செய்துவிடப் போகிறான்?’ என்று நினைக்காமல் அவர்களின் அன்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் செல்கிறது.
என்னுடைய திருமண வாழ்க்கையும் அப்படித்தான். நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சிக்கு ஜோதிகாவிடம் இருந்து அளப்பரிய அன்பு திரும்பக் கிடைக்கிறது. அவர் என் மீது பொழியும் அன்பிற்கு ஈடாக என்னால் எதுவுமே செய்ய முடியாது. அதனால் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முழு மனதோடும் உண்மையாகவும் செய்ய முயற்சிக்கிறேன்” என்றார். ழகரம் நிறுவனம் தொடங்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “அகரம் அறக்கட்டளை போல் சினிமாவிலும் ஒரு முயற்சியை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2டி நிறுவனம் எப்போதும் குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய, வணிக ரீதியாகவும் வெற்றிபெறக்கூடிய எல்லாரும் செய்யக்கூடிய விஷயத்தை செய்து வருகிறது. ஆனால், எங்களது ழகரம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இதுவரை வெளிவராத புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். புதிய திறமையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே ழகரத்தின் நோக்கம்” என்றார்.
