அதனால்தான், இந்த மழையானது சுறுசுறுப்பாகவும் நல்ல பலனைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதேபோல் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரும் மிகுந்த பலனளிக்கும் ஒன்றாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். ‘ஸ்கைரூட்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் சராசரி வயது வெறும் 28 ஆண்டுகள் மட்டுமே என்று எனக்குச் சொல்லப்பட்டது. இத்தகைய இளைஞர்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். நான் 56 வயது இளைஞரைப் பற்றிப் பேசவில்லை.
ஒரே மாதத்தில், நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதத்தில் ஆழ்த்தும் தொடர்ச்சியான பல சாதனைகளைச் செய்துள்ளது. தேசிய அளவில் இருந்தாலும் சரி, சர்வதேச அரங்காக இருந்தாலும் சரி அல்லது இப்போது விண்வெளியாக இருந்தாலும் சரி, இவை உண்மையிலேயே இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணங்கள் ஆகும். கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடருக்கு சற்று முன்பாகவே, இந்தியக் குடிமகன் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார். அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்புதான், இந்தியாவின் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது. உலகிலேயே மிகச் சில நாடுகள்தான் இத்தகைய தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைக் கண்டுள்ளன.
இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது ஒரு மகத்தான வெற்றியாகும். இந்தியாவின் உலகளாவிய தகுதி மற்றும் மதிப்பு உலகளாவிய அங்கீகாரத்தையும் ஏற்பையும் பெற்று வருகிறது. இது தற்செயலானது அல்ல; இது ஒரு செய்தி, நம் நாட்டு இளைஞர்களின் திறனும் லட்சியங்களும் இந்த விண்வெளியைப் போலவே எல்லையற்றவை என்ற சக்திவாய்ந்த செய்தியாகும்” எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பேசுகையில், “56 வயது இளைஞர்” என்று குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
