நாளை உருவாகிறது அர்னாப் புயல்; மதுரை, திண்டுக்கல், தேனிக்கு ரெட் அலெர்ட்

நமது நிருபர்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் பர்லியாரில், 25 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 20 செ.மீ., குன்னுாரில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று நிலவியது.

இது மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று வலுவடைகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை காலை புயலாக மாறலாம். இது, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஆந்திர கடலோர பகுதிக்கு அருகில், வரும், 28ம் தேதி காலை நகரும்.

ரெட் அலெர்ட்

இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில், 20 செ.மீட்டருக்கும் அதிகமாக அதி கனமழை பெய்யும்.

ஆரஞ்சு அலெர்ட்

கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மஞ்சள் அலெர்ட்

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (அக்டோபர் 26)

நாளை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இம்மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்சு அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அர்னாப் புயல்

வரும் 27ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு, ‘அர்னாப்’ என பெயர் சூட்டப்பட உள்ளது. இது, வங்கதேசம் பரிந்துரைத்த பெயர். வங்க மொழியில் ‘அர்னாப்’ என்றால், கடல் என்று அர்த்தம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link