தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை முன்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை காவல்துறையினர் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் கடந்த 2ஆம் தேதி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரச்சாரத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்திற்குச் சென்று, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர், பேனர் அகற்றப்பட்டதற்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதனால் தாராபுரம் காவல் நிலையம் முன்பு பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதம் நீடித்தது. இதனிடையே, கடந்த 04ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்டிருந்தார். அப்போது, நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் உட்பட 6 பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
