நிச்சயமாக விலை போக மாட்டேன்.. கொட்டும் மழையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா உறுதி – dharapuram dmk candidate suganya speech at by election campaign

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள சுகன்யா, இன்றைய வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் சுகன்யா. அதே போல் திமுகவின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமனும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கொட்டும் மழையில் தாராபுரம் வேட்பாளர் சுகன்யா தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக, திமுக இந்த தேர்தலை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முதல் ஆளாக இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து இருவரும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம் சுகன்யா

இந்நிலையில் திமுக வேட்பாளர் சுகன்யா கொட்டும் மழையில் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதாவது அவர் பேசுகையில், இயற்கை அன்னை நம்மை வரவேற்கிறது. வெற்றி நமதே. உங்களுக்காக நான் கடுமையாக உழைப்பேன் என்பதற்கு இந்த மழையே சாட்சி. நிச்சயமாக விலை போக மாட்டேன். நிர்வாக திறனற்ற இந்த ஆட்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி வைப்போம் என்று தெரிவித்தார்.

கே.என். நேரு பேச்சு

அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, நடைபெறவிருக்கும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அப்படி வெற்றி பெறுவோமானால், தளபதி தான் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார் என்றார். அவருடைய பேச்சைகேட்டு திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து தவெக அரசை விமர்சித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார் கே.என். நேரு.

ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதல்வர்

அதாவது இன்றைக்கு ரீல்ஸ் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. 2500 ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஆயிரம் தான் தருகிறார்கள். ஆறு சிலிண்டர் என சொல்லிவிட்டு தற்போது மூன்று சிலிண்டர் தருவதாக கூறுகிறார்கள். எனவே தளபதி மீண்டும் முதலமைச்சராக வந்தால் தான் இந்த நாடு விளங்கும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

குதிரை பேரம் விவகாரம்

இதற்கிடையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கே தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் தான் தாராபுரம் முன்னாள் எம்எல்ஏவை போன்று நிச்சயமாக நான் விலை போக மாட்டேன் என்ற பொருள்பட திமுக வேட்பாளர் சுகன்யா பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் வியூகம்

இந்த இடைத்தேர்தல் பரப்புரையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா, குதிரை பேரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் என கூறப்பட்டது. இப்படியான நிலையில் அதனை திமுக வேட்பாளர் கையில் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link