தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகி வருகிறார். இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் உடன் விரிவான ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தனது லண்டன் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் அதிரடி அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 10ஆம் தேதி லண்டன் சுற்றுப்பயணம் செல்கிறார். தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் 6 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில் புதிய நிறுவனங்களை கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு வித்திடவுள்ளார். இந்த பயணம் முடிந்ததும் சில அதிரடியான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் கையில் எடுக்கவுள்ளார். நாளைய தினம் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது.
முதல்முறை சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை
நடப்பு கூட்டத்தொடரில் தான் முதல்முறை பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் உறுப்பினர்கள் அனைவரது செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. அரசியல் களத்தை தாண்டி சாமானியர்கள், இளைஞர்கள், குடும்ப பெண்கள் ஆகியோர் மத்தியிலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த ஒரு மாத கால பேரவை நிகழ்வுகள் அரங்கேறின.
இதில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், மறுபுறம் பேரவையை தாண்டி களத்திலும், நிர்வாக ரீதியிலும் சிறப்பான முறையில் செயல்படாத அமைச்சர்களை மாற்றவும், விலக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
முதல்வர் விஜய்க்கு கைக்கு வந்த உளவுத்துறை அறிக்கை
இதுதொடர்பாக உளவுத்துறை மூலம் விரிவான அறிக்கையை கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சில அமைச்சர்களின் துறைகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அதில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனின் பெயரும் அடிபடுகிறது. இவரது துறை அமைச்சர் ராஜ்மோகன் வசம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர். இவரது வசமுள்ள பள்ளிக் கல்வித்துறையானது மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறுகின்றனர்.
அமைச்சர் மரிய வில்சன் மீது அதிருப்தி
மரிய வில்சனை பொறுத்தவரை ஜேப்பியாரின் மருமகன் என்பது பலரும் அறிந்த விஷயம். இவருடைய கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மரிய வில்சனின் கைகளில் இருக்கிறது. கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். எனவே புதிதாக பள்ளிக் கல்வித்துறையை கையாள்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் எதற்காக இந்த மாற்றம் என்பது முக்கியமானது. மரிய வில்சன் மீது முதலமைச்சர் விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் ஒருவித அதிருப்தி என்ற பேச்சு அடிபடுகிறது.
நிதித்துறை முதல் சட்டப்பேரவை செயல்பாடுகள் வரை
முதலில் நிதித்துறையில் வெள்ளை அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் அது கடந்த திமுக ஆட்சியை லெஃப்ட், ரைட் வாங்கும் அளவிற்கு அதிரடியாக இல்லை என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. அதன்பிறகு துறை சார் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஒவ்வொன்றாக கவனித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் சில சர்ச்சைகளில் சிக்கினார். தனது சகோதரரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார். இவை அனைத்தும் மரிய வில்சன் மீதான அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
கவனம் ஈர்க்கும் அமைச்சர் ராஜ்மோகன்
ராஜ்மோகனை பொறுத்தவரை புதிதாக வரக்கூடிய நிதித்துறை உடன் ஏற்கனவே வகித்து வரும் தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றையும் கவனிப்பார் என்று தெரிய வந்துள்ளது. இவர் எந்த ஒரு சூழலையும் திறம்பட கையாண்டு வருவதை பார்க்க முடிகிறது. அரசியலை பொறுத்தவரை வேகமாக உள் வாங்கி கொண்டு பதிலளிக்க வேண்டும். அதை அமைச்சர் ராஜ்மோகன் சரியாக செய்து வருவதாக முதலமைச்சர் விஜய் கருதுகிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு உடனுக்குடன் தரமான பதிலடி
மரிய வில்சனிடம் நிர்வாக திறமைகள் இருந்தாலும் ராஜ்மோகன் விரைவாக கற்றுக் கொள்ளக்கூடிய நபராக இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்ட விதமும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
