சென்னை: நிர்வாக வசதிக்காக அறநிலையத்துறை வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு (திருச்சி) என 2 புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அறநிலையத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை: அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், கூடுதல் ஆணையர் பதவிகளை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க, அரசுக்கு துறை ஆணையர் பரிந்துரை செய்திருந்தார்.
அதையேற்று அறநிலையத்துறை நிர்வாக வசதிக்காக வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு (திருச்சி) என 2 புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அந்தஸ்திலான கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வடக்கு மண்டலத்தில் சென்னை 1, 2, 3, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு
மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இணை ஆணையர் மண்டலங்கள் செயல்படும். தெற்கு மண்டலத்தில் திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகியவை இடம்பெறும். புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்த 2 கூடுதல் ஆணையர்களுக்கும் முக்கிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இவர்கள் கோயில் சொத்துகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல், தணிக்கை கட்டணங்களை வசூலித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். நலத்திட்டங்களை ஆய்வு செய்தல், கோயில் நிலங்களின் வருவாயைக் கண்காணித்தல், கோயில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பழனி, கரூர் போன்ற பகுதிகளில் கோயில் நிலங்கள் மற்றும் அதுசார்ந்த பத்திரப்பதிவு விவகாரங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அறநிலையத் துறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
