நமது டில்லி நிருபர்
டில்லியில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க உத்தரவிடக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தினேஷ் மேத்தா, அதிதி சவுத்ரி விசாரித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இருவரும் வேறு முகவரிக்கு இடம்பெயர்ந்ததால், தேர்தல் கமிஷனின் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய முடியவில்லை. புதிய வாக்காளராக சேர்க்க படிவம்-6ஐ தாக்கல் செய்தால், தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்படலாம் என மனுதாரர்கள் அஞ்சுகின்றனர். எனவே, டில்லியில் வசிக்கும் மனுதாரர்கள் இருவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்’என, கோரிக்கை விடுத்தார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரரின் அச்சம் தேவையற்றது. மனுதாரர்கள் இருவரும், ‘படிவம்-6’ஐ உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்’என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் கமிஷன் வழக்கறிஞர், வாக்காளர் பதிவு அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆலோசனையை வழங்கியிருப்பதால், ‘படிவம் 6’ ஐப் பூர்த்தி செய்தால் தவறான பிரமாணப் பத்திரம் அளித்ததாகக் குற்றம் சாட்டப்படலாம் என்ற மனுதாரர்களின் அச்சம் தேவையற்றது என நீதிமன்றம் கருதுகிறது.
இந்த ரிட் மனு தொடர்பான நடவடிக்கைகள் முடித்து வைக்கப்படுகின்றன. மனுதாரர்கள் விரும்பினால், ‘படிவம் – 6’ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பதிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். இது, சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
