நீட் தேர்வில் அசத்திய திருப்பூர் அரசு பள்ளிகள்; 143 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

திருப்பூர்: ‘நீட்’ தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், 143 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த, 508 மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வில், 434 மாணவர்கள் தேர்வெழுதினர். கடந்தாண்டு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 124 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு அது, 177 மதிப்பெண்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தகுதி மதிப்பெண் வரம்பு முந்தைய ஆண்டை விட, 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இருப்பினும், கடினமான தகுதி வரம்பையும் தாண்டி, தேர்வெழுதிய மாணவர்களில், 143 பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ‘மாநில தரவரிசை பட்டியல் அடிப்படையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 40 முதல் 50 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்’ என, எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிப் பள்ளிகள் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவதுநீட், ஜே.இ.இ., கியூட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு அரசு சார்பில் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 143 பேர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்த ‘வெற்றி பள்ளிகள்’ திட்டம் வாயிலாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையப் பள்ளியை தேர்வு செய்து, சனிக்கிழமைகளில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளும், பாடத்திட்டங்களும் வழங்கப்பட்டு, வாராந்திர தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. விரைவாகவும் துல்லியமாகவும் பதிலளிக்கும் வகையில், ‘ஆன்லைன்’ வழி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்காண்டு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Source link