திருப்பூர்: ‘நீட்’ மருத்துவ நுழைவு தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, இடுவம்பாளையம் அரசுப்பள்ளியில் இருந்து, 10 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று, மருத்துவ கல்விக்குள் நுழைய உள்ளனர்.
இவ்வாறு, ‘நீட்’ தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, ‘வெற்றி’ அறக்கட்டளை சார்பில், பாராட்டு விழா மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
வெற்றி’ அறக்கட்டளை தலைவர் சிவராம் வரவேற்று பேசுகையில், ”நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் நுழையும் மாணவ, மாணவியர் அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவ கல்வி முடிக்கும் வரை தேவையான ஊக்குவிப்பு தொடர்ந்து வழங்கப்படும்,” என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி பேசுகையில், ”வாழ்க்கையில் வெற்றி என்பது தானாக வந்துவிடாது. முதல் முயற்சியிலேயே அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. பல முறை தோல்விகளைச் சந்தித்த பின்னரே சாதிக்க முடியும்.
மருத்துவராக முடியாவிட்டால் பொறியாளர், அதுவும் முடியாவிட்டால் ஆசிரியர். அதுவும் முடியாவிட்டாலும் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரி என, ஏதேனும் ஒரு துறையில் வேலை வாய்ப்பும், பதவிகளையும் பெற முடியும். பல துறைகளில், தோல்வியை கண்டவர்களே இன்று உயர் பதவிகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என்றார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாள் பேசுகையில், ”நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற, இடுவம்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த, 10 மாணவர்களில், 9 பேர் மறுமுறை தேர்வு எழுதியவர்கள். ஒருவர் மட்டுமே முதன் முறையிலேயே தேர்ச்சி பெற்றவர். ஒரே பள்ளியிலிருந்து, 10 மாணவர்கள் இத்தகைய சாதனையை எட்டியிருப்பது பெருமைக்குரிய விஷயம். வெற்றி பெற்ற மாணவர்கள், ஒரு வருடத்தை வீணாகக் கருதாமல், ஒழுக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றை பின்பற்றி தங்களது கனவை நனவாக்கியுள்ளனர்,” என்றார்.
தொடர்ந்து, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மவுனிஷ், திருமூர்த்தி, சுசிதரன், மாணவியர் மகாலட்சுமி, பவித்ரா, ஜோஷிகா, ரூபாஸ்ரீ, சந்தியா, சக்தி சபரீஸ்வரி, கவுசல்யா ஆகியோருக்கு, ‘வெற்றி’ அறக்கட்டளை சார்பில், ஒவ்வொருவருக்கும், தலா, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
