சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: சுமையை குறைத்தல், வணிகமயமாக்கலை ஒழித்தல், தரத்தை மேம்படுத்துதல் என, மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன், ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒவ்வொரு அம்சத்திலும், ‘நீட்’ தோல்வி அடைந்துள்ளது. கற்றல் மையத்தை, பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு, ‘நீட்’ மாற்றி உள்ளது.
இந்த தேர்வின் பிரச்னை, எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. மாணவர்கள் போராட்டம், மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழில், ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையில், ‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு, அந்த உரிமை வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கை முறைகளில் நிலவும் பன்முகத்தன்மையால் கல்வித்தரம் பாதிப்படையாது. மாறாக, சமத்துவத்தையும் சிறப்பான வெளிப்பாட்டையும் வலுப்படுத்தக்கூடும்.
‘இந்தியாவுக்குத் தேவை அதிகார குவிப்பு அல்ல. மாநிலங்கள் மீதும், மாநில அரசு பள்ளிகள் மீதும், மாணவர்கள் மீதும் அதிக நம்பிக்கை வைப்பதே, நாட்டின் இன்றைய தேவை. நீட் தன் வாக்குறுதியில் தோற்று விட்டது. மாநிலங்களை நம்பும் காலம் வந்து விட்டது’ என, குறிப்பிட்டுள்ளார்.
த.வெ.க.,வுக்கு அச்சம்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக, டில்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தில், போலீஸ் துறையின் வன்முறையை கண்டித்து, சென்னை எழும்பூரில் போராடிய மாணவர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட, மத்திய பா.ஜ., அரசை பகைத்துக் கொள்வதாகி விடும் என்ற அச்சத்தில் தான், இளைஞர்களை வலுக்கட்டாயமாக, த.வெ.க., அரசு கைது செய்துள்ளது. – கனிமொழி, துணை பொதுச்செயலர், தி.மு.க.,
