புதுச்சேரியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
புதுவையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. லாஸ்பேட்டை நாவலர் பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டனர். அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பறை அடித்து இந்தி பாடல்களை பாடி நடத்தினர்.
காலை 11 மணியளவில் போலீசார் அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் கலைய மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. (CITU) சார்பில் காமராஜர் சிலை அருகே மாநில தலைவர் சீனுவாசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராமசந்திரன், மூத்த தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், அண்ணா சிலை அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், டெல்லி போராட்டத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
