புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முடங்கி வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி இயக்கத்தினரும் அடம்பிடித்து வருகின்றனர்.
சிஜேபி இயக்கத்தினர் உடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்க அந்த இயக்கத்தினர் மறுத்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இருப்பினும் பார்லிமென்டில் அமளி தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பார்லிமென்ட் எம்பிக்களை கொண்டுள்ள கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ராஜினாமா என எந்த நிபந்தனையும் விதிக்காமல், ஆலோசனைக்கு எதிர்க்கட்சிகள் வர வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
