நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் : மாநிலங்களவையில் காரசார விவாதம்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்து பேசுகையில், “மாநிலங்களவையில் அரசாங்கத்தின் தரப்பை முன்வைக்க விரும்புகிறேன். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே, அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசு கூறி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஆரம்பத்திலிருந்தே விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இப்போதும் தயாராக இருக்கிறோம். 

அரசாங்கம் விவாதத்திற்குத் தயாராக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களிடமும், மற்ற கட்சித் தலைவர்களிடமும் கூறியுள்ளோம். ஆனால், விவாதத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை அவைத் தலைவரின் தலைமையில் அனைவரையும் சந்தித்த பிறகே முடிவு செய்ய வேண்டும். விவாதத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள் சாக்குப்போக்குகளைத் தேடி, நிபந்தனைகளை விதித்தால் அது சரியல்ல. இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவைத் தலைவர் முடிவு செய்தவுடன், அரசாங்கம் 100% விவாதத்திற்குத் தயாராக உள்ளது” என்றார்.

இத்னையடுத்து மத்திய அமைச்சரும், அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா கூறுகையில், “இந்தியா கூட்டணியின் நடத்தை மிகவும் பொறுப்பற்றது. இந்த ஜனநாயக விரோத நடத்தையை நாடாளுமன்றத்தில் நாம் தெளிவாகக் காண முடிகிறது. நாடாளுமன்ற மாண்பு சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயக விழுமியங்கள் மீறப்படுகின்றன. அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சற்றுமுன் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இது தவிர, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவாதிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், எங்களது அரசு ஒரு வெளிப்படையான அரசு. இது எப்போதும் மக்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்யும் அரசு. எனவே, எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு ஜனநாயகம் அல்லது ஜனநாயக விழுமியங்கள் மீது நம்பிக்கை இல்லை” என்றார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “நியாயமான விவாதம் நடக்க வேண்டுமானால், முதலில் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யும் வரை, இங்கு நியாயமான விவாதம் நடக்காது” என்றார்.

Source link