புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வினாத்தாள் கசிவுகளை தடுப்பதற்கு தற்காலிக நடவடிக்கையை நம்பியிருக்காமல், நிரந்த தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தேர்வுக்கு முன்பு, தேர்வின் போது மற்றும் தேர்வு முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும், தேர்வு முறைகள், தேர்வு மையங்கள், வினாத்தாள் அச்சிடுதல், அதனை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து முறைகள் பற்றியும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது, நீட் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்துவது குறித்த பரிந்துரைகள் மற்றும் அதன் தரவு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவுக்குப் பிறகு, தேர்வு மையங்களுக்கு வினாத்தளைக் கொண்டு செல்ல விமானப் படையைப் பயன்படுத்தியது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே, அது நிரந்தர தீர்வாக முடியாது என்று கூறிய நீதிபதிகள், விண்ணப்பதாரர்களைச் சரிபார்க்க ‘டிஜியாத்ரா’ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த முன்மொழிவை விளக்குமாறும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதை உறுதி செய்யும் வரை கண்காணிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, விரைவில் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட இருநீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
