நீட் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற இளைஞர்கள் மீது காவல்துறையினர் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய மறுநாளே, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடியின் இல்லம் அருகே செவ்வாய்க்கிழமை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை, 3 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்து போராட்டத்தைக் கலைத்தனர்.
டெல்லியின் மையப்பகுதியில் திங்கள்கிழமை இளைஞர்கள் பெருமளவில் திரண்டதைத் தொடர்ந்து, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மட்டுமே இந்தத் தாள் கசிவு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுப்பது போன்ற பொதுப்பிம்பம் உருவாகிவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருந்தது. ஏனெனில், ராகுல் காந்தி இந்த விவகாரங்களை நீண்டகாலமாக எழுப்பி வருவதோடு, கோட்டா மற்றும் டேராடூனில் இது தொடர்பான பெரிய கூட்டங்களையும் நடத்தியிருந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
திங்கள்கிழமை நடந்த போராட்டம் இளைஞர்களிடையே நிலவும் அதிருப்தியைப் பிரதிபலித்ததால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த போராட்டக் களத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அதே சமயம், காங்கிரஸ் அல்லாத பெரும்பாலான எதிர்க்கட்சிகள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு (CJP) ஆதரவாகத் திரண்டுள்ளன. என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜரிவால் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு நேரடியாகச் சென்றனர். காங்கிரஸ் சேவா தளம் தனது தொண்டர்களை ஜந்தர் மந்தருக்கு அனுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் விநியோகித்தது.
அதேவேளையில், சி.ஜே.பி-ன் போராட்டத்திலிருந்து கவனத்தைத் திருப்பவே காங்கிரஸ் இந்தத் தர்ணா நாடகத்தை நடத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. சி.ஜே.பி-ன் தர்ணாவைப் பலவீனப்படுத்தவே ராகுல் காந்தி தனது வீட்டின் முன் போராட்டம் நடத்த மோடி ஜி அனுமதித்துள்ளார் என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாடாளுமன்றத்தில் தேர்வுத் தாள் கசிவு குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்ட போதிலும், ராகுல் காந்தி தனது வாக்கை மீறி, கல்வி அமைச்சர் பிரதானின் ராஜினாமாவையும் வற்புறுத்தியதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
திங்கள்கிழமை பிற்பகலில், காயமடைந்த போராட்டக்காரர்களை ஆர்.எம்.எல் (RML) மருத்துவமனையில் ராகுலும் பிரியங்காவும் சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் இருந்து அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் ஒரு செய்தி வந்தது. காங்கிரஸ் தலைவரின் பிறந்தநாளுக்கு முறைப்படி வாழ்த்து தெரிவிக்க, மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இன்று மாலை 3 மணிக்கு புதுடெல்லியில் உள்ள 10, ராஜாஜி மார்க்கிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
அவர்கள் கார்கேவின் இல்லத்திற்கு வந்தடைந்தபோதுதான், பிரதமரின் ‘7, லோக் கல்யாண் மார்க்’ இல்லத்தை நோக்கி பேரணியாகச் செல்ல வேண்டும் என்ற திட்டம் தெரிவிக்கப்பட்டது. இது பல எம்.பி.க்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தர்ணா திட்டம் குறித்துத் தங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் தெரிவித்தார்.
கார்கே ஜிக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கவே நாங்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டோம். அங்கு வந்த பிறகுதான் பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடப்பதாகவும், நாங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது எங்களுக்குத் திடீரென நடந்ததுதான் என்று அந்த எம்.பி கூறினார். கேரளாவில் உள்ள ‘கேரளா ஹவுசில்’ இருந்த கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், இப்போராட்டம் குறித்துத் தெரிந்ததும் தனது சக சகாக்களுடன் இணைந்துகொண்டார்; இருப்பினும் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் இல்லத்திற்கு வெளியே, ராகுல் காந்தி தனது கட்சித் தோழர்களுக்கு ‘ஜிப் டை’களை (Zip ties) விநியோகிப்பதைக் காண முடிந்தது. காவல்துறையினர் தங்களை இழுத்து செல்வதைக் கடினமாக்கும் வகையில் அவர்கள் தங்கள் மணிக்கட்டுகளை ஒன்றாக கட்டிக் கொண்டனர். போராட்டக் களத்தில் இருந்து X தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, நமது மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியரையும் இந்த தர்ணாவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். எந்தப் பதிலும் அளிக்காமல், எந்த விளைவுகளையும் சந்திக்காமல் தப்பித்துவிடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் அவரால் முடியாது, இந்த முறை நிச்சயம் முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்த அழைப்பை ஏற்று, சுப்ரியா சுலே மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் போராட்டத்தில் இணைந்தனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், ராகுல் காந்தியுடன் பேசி போராட்டத்தைக் கைவிடச் செய்யவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோரை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங், நீட் விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி ஆரம்பத்தில் கோரினார். அரசின் உயர்மட்டத் தலைமையின் அனுமதியைப் பெற்றுச் சில நிமிடங்களிலேயே, அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நீட் மற்றும் அது தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் என்றும் திரு. ராகுல் காந்தியிடம் உறுதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இருப்பினும், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்வுடன் எதிர்க்கட்சித் தலைவர் தனது வாக்கை மீறி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த உறுதியைக் கேட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அவரைப் போன்ற ஒரு மூத்த தலைவர் தான் கொடுத்த வாக்கிலிருந்து இவ்வளவு சீக்கிரம் பின்வாங்குவது அவருக்கு அழகல்ல என்று பணிவுடன் எடுத்துரைக்க முயன்றபோது, அது தனது தனிப்பட்ட உரிமை என்று ராகுல் கூறினார். தர்ணா நடத்துவதற்கு இந்த இடம் ஏற்றதல்ல என்று உள்துறைச் செயலாளர் விளக்கவும் முயன்றார். ஆனால், தான் விரும்பும் இடத்தில் அமர்வதும் தனது உரிமைதான் என்பதே ராகுலின் பதிலாக இருந்தது என்று ஜிதேந்திர சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
