நீட் வினாத்தாள் கசிவு: 35-வது நாளாகத் தொடரும் போராட்டம் – சி.ஜே.பி உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தொடர்ந்து 35-வது நாளை எட்டியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இதற்குக் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது நாடு தழுவிய அளவில் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, கனிமொழி தலைமையிலான தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் போராட்டக்களத்திற்கு நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தின் தீவிரத்தை அடுத்து, பிரச்சனையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அமைப்பின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளும், மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதனிடையே, வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வழக்குகளை உடனுக்குடன் விசாரித்துத் தண்டனை வழங்கத் தனி ‘விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Source link